Sunday, October 17, 2010

Significance of Navrathri and Vijayadasami Paarvettai purappadu at Thiruvallikkeni

"பார் எல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி,
அவர் பார்த்தனுக்கு தேர் ஓட்டும் சாரதி,
எங்கள் சாரதி; பார்த்தசாரதி ; எங்கள் சாரதி !! ; பார்த்த சாரதி" ……

என ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளை புகழ்ந்து பாராட்டி, திருவல்லிக்கேணி திருக்கோவிலில் நடக்கும் வருடாந்தர உத்சவங்கள் எல்லாவற்றையும் பற்றிய பாடல் மிக பிரபலமானது. மறைந்த திரு கே வீரமணி அவர்கள் கணீர் குரலில் பாடிய அந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உத்சாகமும் தைரியமும் தரவல்லது.

அதில் புரட்டாசி மாத உத்சவங்கள் பற்றி சில வரிகள் இங்கே :
" வன்னி மர பார்வேட்டை கண்டு அருள வலம் வரவே !
மன்னவனும் எழுந்து அருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்;
அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு
அலங்காரம் ஒன்பது நாள் - நவராத்திரி நன்னாள் ".


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பது நாளும் ஸ்ரீ வேதவல்லிதாயார் இரவு 7 மணி அளவில் புறப்பாடு கண்டு அருள்கிறார். கோவில் த்வஜஸ்தம்பம் சுற்றி வேதவல்லி தாயார் – கமல வாகனம், கிளி வாகனம், சேஷ வாகனம், யாளி வாகனம், வெள்ளி சிம்ஹ வாகனம், குதிரை வாகனம், அம்ச வாகனம், யானை வாகனம் என பல வாகனங்களில் புறப்பாடு கண்டு அருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சரஸ்வதி பூஜை அன்று தாயார் புறப்பாடு முடிந்தவுடன், கோவிலில் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு மங்களகரமாக வழங்கப் படுகிறது. இந்த வருடம் ஸ்ரீ வேதாந்தா சார்யர் சாற்றுமுறை (புரட்டாசி திருவோணம்) 16/10/10 அன்று வந்தமையால் வேதாந்தாசார்யார் ஸ்ரீமன்னாதனுடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.


நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகாநவமி என்று தொழில்களையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று கல்வியை போற்றும் வெற்றித் திருநாளாகவும் தொன்மைக்காலம் தொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜயதசமி அன்று ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பார்வேட்டை புறப்பாடு கண்டு அருள்கிறார். பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்துஅருளி வன்னி மரத்தில் அம்பு எய்யும் வைபவம் நடக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை பெருமாள் வேங்கடரங்கம் தெருவில் உள்ள வசந்த பங்களாவிற்கு புறப்பாடு கண்டு அங்கே பார்வேட்டை நடக்கும். பிறகு பெருமாள் பெசன்ட் ரோடு வழியாக சாத்தானி தெரு எனப்படும் துளசிங்க பெருமாள் கோவில் தெரு பக்கம் வழியாக பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருள்வார். இப்போது இந்த பங்களா இல்லாதபடியால் பார்வேட்டை வைபவம் கோவில் வாசலிலேயே நடக்கிறது. புறப்பாட்டில் தாடி பஞ்சகம் மற்றும் ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னம் சேவிக்கபடுகிறது.


திருவல்லிகேணியில் இன்று 17/10/2010 நடந்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :







மகாபாரதத்தில் விராட பர்வம் முக்கியமானது. இது பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த ஓராண்டு நிகழ்வுகளை கூறும் பர்வம். இந்த கால கட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும்போது, தங்கள் போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கின்றது. வன்னி மரம் புனிதமாக கருதப்படுகிறது. மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்ததாக ஏட்டில் உள்ளது.

மலை நாட்டு திவ்யதேசமான "திருவாறன் விளை" எனும் புண்ணிய தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாக கூறுவர். இங்கு அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக கூறப்படும் வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள் என படித்திருக்கிறேன்.

************************************************************************************
""ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது. ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்."" ( நவராத்திரி பற்றி பாரதியார் உரை)


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment