திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் திருப்பவித்ரோத்சவம் - தினமும் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருவீதி புறப்பாடும்,
யாகசாலை, திருவாய்மொழி கோஷ்டி என சிறப்புற பரிமளித்து வருகிறது. 16.9.2024
அன்று இவ்வுத்ஸவத்தில் நான்காம் நாள்.
திருவல்லிக்கேணி எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி - ஸ்ரீ கண்ணன், பாரதப்போர் தனிலே
பார்த்தனுக்கு சாரத்யம் பண்ணினவன். ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒரு அற்புதம். எம்பெருமான்
இடையனாக, பலப்பல கஷ்டங்களுக்கு நடுவே நாளொரு மேனியும் பொழுதொரு அற்புத லீலைகளுமாய்
திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான். யசோதாபிராட்டியும் மற்றைய ஆயரும் கொஞ்சி
குலாவி பாலூட்டி சீராட்டி கண்ணனை வளர்த்தனர். கண்ணனும் பலராமனும் “காடுகளூடு
போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி“ என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள்தோறும்
திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே சென்று வந்தான். அத்தகைய
மணிவண்ணன், யசோதை தன்கையிலும் தடி வைத்துக்கொண்டிருந்தாளாகையாலே அதனைக்
கண்டு அஞ்சி ஓடிப்போய் விடுவனோ வென்று சங்கித்து, பிரானே! நான் அது செய்யகில்லேனென்கிறாள்.
என்கையில் கோலுள்ளது உண்மைதான், ஆனால் இது கொண்டு காரியங் கொள்ளும்படியான வன்மை எனக்கில்லை
காண் என்கிறாள்.
இதோ கலியன் திருமங்கை மன்னனின்
வார்த்தைகளில் ஒரு பாசுரம். : -
உந்தம் அடிகள் முனிவர்
உன்னைநான் என்கையிற் கோலால்
நொந்திட மோதவுங்கில்லேன் நுங்கள்தம் ஆநிரையெல்லாம்
வந்து புகுதரும் போது
வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதங்கு நில்லேல்! ஆழியங்
கையனே வாராய்.
திருவாழியினால் அழகு பெற்ற திருக்கைகளை
உடையவனே! எங்கள் கண்ணபிரானே ! நீ செய்கிற தீமைகளைக் கண்டால், உங்கள் பிதாவாகிய
நந்தகோபர் சீற்றம் கொள்வார். [யசோதையாகிற] நானோ, என் கையிலுள்ள கொம்பினால்
உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன், உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம் காடுகளில்
மேய்ந்து திரிந்து, மீண்டு வந்து ஊர்க்குள் புகும்போது ஆகாசத்திலுள்ள
தேவதைகள் கண் எச்சில் படுமாறு காணும் மாலைப்பொழுதிலே நாற்சந்தியிலே
நிற்கவேண்டா, என்னருகே வந்திடாய் என யசோதை சீராட்டுகிறாள்.
அத்தகைய அழகிய மணிநிறக் கண்ணபிரான் அற்புதமான திருவபிஷேகம், மலர் மாலைகள், திருவாபரணங்கள், பதக்கங்கள், யக்னோபவீதம், திருபவித்ர மாலைகள் அணிந்து காட்சியளிக்கும் சில படங்கள் இங்கே.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
No comments:
Post a Comment