Monday, May 1, 2023

Thiruvallikkeni Thiruther 2023 - தேர்ப்பாகன் !!

உத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது.  அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கும் மக்கள்  வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவர். 




இதிஹாச புராணமான ஸ்ரீ இராமாயணத்தில், இந்திரன் கட்டளைப்படி தேர் வந்தது இந்திரனின் சாரதியான மாதலி, தேரை செலுத்தினான்.  இந்திரனின் ரத சாரதி மாதலி,  வெறும் தேரோட்டியாய் மட்டும் இல்லாமல், சமயங்களில் தகுந்த ஆலோசனைகள் கூறும் மதியூகியாகவும் செயல்பட்டான்.   

தேர்ப்பாகன் !!  -  சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.

பாகன் எனும் பெயர்ச்சொல்லுக்கு  - யானையைத் தன் கட்டளைப்படி செயல்பட பழக்கிவைத்திருப்பவர் எனவும் ரதத்தை செலுத்துவான் - தேர் ஒட்டி, சாரதி எனவும் பொருள்.   இது உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கு ஓர் எடுத்துக்காட்டு.  இத்தொடர் “தேரை ஓட்டும் பாகன்” என விரிந்து பொருளை உணர்த்துகிறது.  தேர், பாகன் எனும் சொற்களுக்கிடை யில் “ஐ” என்னும் வேற்றுமை உருபும் “ ஓட்டும் ” என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன . இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே. 

மகாபாரதத்தில் அர்ச்சுனன், கர்ணன், பீமன் உள்ளிட்ட மாவீரர்களைப் போல, எவராலும் வெல்ல முடியாத  வீரன் சல்லியன்.   மத்ர தேசத்தின் அரசன். பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி குந்தி. மற்றொருத்தி மாத்ரி. இவளுடைய பிள்ளைகள் நகுலனும், சகாதேவனும். மாத்ரியின் உடன்பிறந்த சகோதரன்தான், சல்லியன். நகுல-சகாதேவர்களின் தாய்மாமன்.   மகாபாரதப்போரில் துரியோதனனின்  சூழ்ச்சியால் கவுரவர்களின் பக்கம் நின்று போர் புரிந்தான்.  சல்லியன் சிறந்த தேர் ஒட்டி, கர்ணனுக்கு தேரை செலுத்தினான்.



தேர் ஓட்டிகள், வீரர்கள் ஆயிரவர் இருந்தாலும் - என்றென்றும் அற்புதமான தேரோட்டி - குருக்ஷேத்ரத்தில் கீதை எனும் பாடம் அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணனே !  அவனே, திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே - கீதாசார்யனாக, அர்ஜுனனுக்கு சாரத்யம் செய்த ஸ்ரீபார்த்தசாரதியாக சேவை சாதிக்கின்றான். 


வருகின்ற 10.5.2023, திருவல்லிக்கேணியிலே ஸ்ரீபார்த்தசாரதி சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் 7ம் நாள் - திருத்தேர். அந்த திருத்தேரின் அழகான சாரதி பொம்மையின் படம் இங்கே!  மற்ற படங்கள் முந்தைய வருஷத்தவை.  

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
1.5.2023 

No comments:

Post a Comment