சந்தோஷம் என்றால் மகிழ்ச்சி, ஆனந்தம் - நாம் அனைவருமே எப்போதும் மனதில் நினைப்பது !! எல்லாருமே சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறார்கள்.
ஸ்ரீமன் நாரணனே பரம்பொருள் - நமது வாழ்வின் அர்த்தமே, அவனை பணிந்து, அவனுக்கு பணி செய்து கிடத்தலே!! எம்பெருமான் இடத்திலே நம்மை ஈடுபடுத்திக்கொண்டோர்க்கு 'சகலமும் அவனே' - நம்மை அழைத்து, அரவணைத்து, காத்து, சரியான பாதையிலே எடுத்துச்செல்பவன் அவன் ... அவனது திருப்பாத கமலங்களை அருகே இருந்து அனுபவித்து, அவனுக்கு கைங்கர்யம் பண்ண பற்பல அரிய வாய்ப்புகள் அவனே நமக்கு தந்து அருள்கிறான்.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே நாளை [4.5.2023] முதல் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானுக்கு சித்திரை ப்ரஹ்மோத்ஸவம் - பற்பல கைங்கர்யங்கள் செய்தலுக்கு அனைவருக்கும் வாய்ப்பு அமையும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் பலர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு கைங்கர்யங்களை செய்கின்றனர். பெரியகோவிலாம் திருவரங்கத்தில் எம்பெருமானார் ராமானுஜர் பத்து கொத்து பரிவாரம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்; இப்போதும் இந்தக் கோவிலில் இந்த கைங்கர்யங்கள் செய்யும் அனைவருக்கும் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது;
திருவல்லிக்கேணி பல கைங்கர்யங்களில் எம்பெருமானின் பரிவாரங்களில் ஒன்றான வெள்ளி தடி. தீவட்டி போல எம்பெருமானின் புறப்பாடு முழுவதும் இதை ஏந்தி கூடவே வருவார்கள். ஸ்ரீசடகோபம் கூடவே இத்தடியை ஏந்தியவர் நடந்து வருவர்.
இன்றைய சேனைமுதலியார் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட இப்படத்தில் திரு சத்யநாராயணா வெள்ளி தடி கைங்கர்யம் செய்வதை காணலாம். பல ஆண்டுகளாக நாள் தவறாமல் வரும் இவர் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் நன்கு அறிந்தவர். கடைசி படம் ஆவணி 2017 ஸ்ரீபார்த்தசாரதி புறப்பாடு.
கள்ளவிழ் தாமரைக்கண் கண்ணனே!
எனக்கு ஒன்று அருளாய் - தேனோடு மலர்கின்ற தாமரை
போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே! எங்களை காப்பாற்றுவாயாக !!
No comments:
Post a Comment