Tuesday, January 10, 2023

Sri Andal Neeratta Uthsavam 6 - 2023 : “மாலே மணிவண்ணா "

Sri Andal Neeratta Uthsavam 6 - 2023 : “மாலே மணிவண்ணா "

 

At Thiruvallikkeni divyadesam today [10th Jan 2023] is day 6  of Andal Neeratta Uthsavam.    

 

மஹாபாரதம் ஒரு அற்புத காவியம்.  தூது சென்ற கண்ணனின் ஏற்றம் விவரிக்கும் இதிஹாச புராணம். சந்திர வம்சத்து மன்னன் யயாதிக்கு தேவயானி, சன்மிஷ்டை என இரு மனைவிகள். தேவயானிக்கு இரு மகன்கள். அதில் மூத்த  மகனின் பெயர்  யது.  போஜர்களும், விருஷ்ணிகளும்.  யது வம்சத்தில் வந்ததால் யாதவர்கள் என அழைக்கப்பட்டனர். விருஷ்ணியின் பரம்பரையில் வந்த "ஆகுகன்"  என்ற மன்னனுக்குத்  "தேவகன்", "உக்ரசேனன்" என்ற இரு மகன்கள் இருந்தனர். தேவகனுக்கு நான்கு மகன்களும் , ஏழு மகள்களும் இருந்தனர். அதில் கடைசிப் பெண்ணே மாதவம் செய்தாலும் கிட்டாத  கண்ணனை  திருவயிற்றில் பெற்ற  மாதரசி   தேவகி.  தேவகியை யது குலத்தில் வந்த வசுதேவர் மணந்தார்.    

பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பல அற்புத திருக்கோவில்கள்.   துவாரகையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு  துவாரகாதீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என அழைக்கப்படும் இவ்வாலயத்தின் பிரதான வாசலுக்குப் பெயர் சுவர்க்க துவாரம்.  பல்லாயிரக்கணக்கான பேர்களால் அர்ச்சிக்கப்படுபவன் கண்ணன்.

பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக் கொண்டது.  ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில்  ஆறாம் நாள் இன்று  (10.1.2023) .. திருப்பாவையில், இன்றைய நாள் பாசுரம் =   “மாலே மணிவண்ணா மார்கழி  நீராடுவான்  ” !!  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவன்; நீலமேக ஷ்யாமளன்.  அவனிடத்திலே  தாங்கஓல்  அனுஷ்டித்து வந்த பாவை நோன்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் அருளும் படி ஆண்டாள் வேண்டும் பாடல் இன்றைய பாசுரம்.  

ஹ்ருஷீகேசன்; அச்யுதன்; கேசவன்; கோவிந்தன்; மதுசூதனன்; ஜநார்தனன்; மாதவன், கோவிந்தன்,   கோபாலன், கோவர்தனன்,  இராதா கிருட்டிணன்-  இன்ன பிற !!  ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக்  கண்ணனை மணிவண்ணன் என்று அழைக்கின்றார்.  பாவை நோன்பு காணும் பெண்கள் கண்ணனிடம் பறை மட்டுமல்ல ,  சின்னச்சின்ன பொருட்களை  விழைகிறார்கள்.  அதுவும், கண்ணனுடன் சேர அவர்கள் மேற்கொண்ட நோன்பிற்காகவே!

எம்பெருமானே !, பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று நோன்பு செய்தவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, ‘பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?’ என்று வினவுகிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் அவனிடம் யாசிக்கிறார்கள்.  நோன்பு நோற்பது என்பது பகவானுக்காக பக்தர்கள் செய்யும் கைங்கர்யமே ஆகும். இத்தை பூர்வாசார்யர்கள் சொன்னபடி செய்வது சிஷ்டாசாரம்.  இத்தகைய நோன்பு நோற்பதற்க்கு  இந்த ஐஸ்வர்யங்களை எல்லாம் அருள் என்று  அவனிடமே யாசிக்கிறார்கள்.. திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டுபாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக்கொண்டு போம்படி மங்களதீபம் வேண்டும்; நெடுந்தூரத்திலேயே எங்கள் திரளைக்கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக்கொண்டு போவதற்குக் கொடிவேண்டும்; புறப்பட்டுப் போம்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்?  ஆகிய இவ்வுபகரணங்களையெல்லாம் நீ தந்தருளவேணு மென்கிறார்கள். இப்படி இவர்கள் முறையிட்டபடியே -  தன்னுடைய சின்னங்களையெல்லாம் எம்பெருமான் கொடுத்து அருளினான்.   

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் *

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*

பால்அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே*

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே*

சாலப்பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே*

கோல விளக்கே கொடியே விதானமே *

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.   

மாலே என விளித்து - பக்தர்கள் தம் பக்கல்  வியாமோஹமுடையவனே! என்பதை உணர்த்துகிறார்.  எங்கள் எம்பிரானே,  நீலமணி போன்ற வடிவை உடையவனே! - முன்னொரு நாளிலே  அண்டம்  முழுதும் ப்ரளயத்தால் அகப்பட்ட காலத்திலே,  ஆலந்தளிரில் பள்ளிகொள்பவனே!   மார்கழி நீராட்டத்திற்காக உத்தமபுருஷர்களான ஆசார்யர்கள் அநுட்டிக்கும் முறைமைகளில் வேண்டியவற்றை உன்னிடத்தில் நாங்கள் கேட்கிறோம்.    பூமியடங்கலும்  நடுங்கும்படி ஒலிசெய்யக் கடவனவும்ஆன பால் போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஒத்திருப்பனவுமான சங்கங்களையும் மிகவும் இடமுடையனவும்  பெரியனவுமான பறைகளையும் திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் மங்கள தீபங்களையும்,  த்வஜங்களையும் மேற்கட்டிகளையும்  எங்களுக்கு நீ ப்ரஸாதித்தருளவேணும்,  என முறையிடுகிறார் நம் ஆண்டாள்.

                                           Andal prays to the Lord who slept  as a child on a fig leaf during Mahapralaya, the great deluge.  She appeals to that Lord holding the milky white conch that would reverberate,  to hear our aspirations, grant that wide drum, persons who would sing pallandu, bright lamp, festoon and flags and more as her group has performed the margazhi rites as decreed by the elders. Here are some photos of Andal neeratta uthsava  purappadu this morning. 

 
adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.1.2023.  

No comments:

Post a Comment