Thursday, April 14, 2022

பன்னிரு திருமுறை விழா - திருவெட்டீஸ்வரர் திருக்கோவில்

 இன்று சுபகிருது தமிழ் வருஷ பிறப்பு.  திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் உத்சவத்தில் - பன்னிரு திருமுறை விழா + திருஞானசம்பந்தர் புறப்பாடு.


அருள்மிகு திருவெட்டீஸ்வரர்

முக்கிய சிவாலயங்களில் நடராஜரின் சன்னதிக்கு அருகில் புத்தகங்கள் (மறை நூல்கள்) பன்னிரு திருமுறைகள் ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்து முக்கிய நாட்களில் சிறப்புப் பூஜை செய்யப்படும். பார்த்துள்ளீர்களா ??

 

செந்நெலங்கழனிப் பழனத்தயலே  செழும்

புன்னை வெண்கிழியிற்  பவளம்புரை பூந்தராய்

துன்னி நல்லிமையோர்  முடிதோய்  கழலீர் சொலீர்

பின்னு செஞ்சடையிற்  பிறை பாம்புடன் வைத்ததே.

 

செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.

 

நம்பியாண்டார் நம்பி  என்ற சைவ சமயப் பெரியோர்,  சைவத் திருமுறைகளைத் தொகுத்து அளித்து  பல நூல்களையும் இயற்றியுள்ளார். சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை. சைவ சமயம் தழைப்பதற்காக வந்த இந்த நூல்கள் பன்னிரு திருமுறைகள் எனப்படும். மாமன்னர்  இராஜராஜசோழன் தமிழுக்குச் செய்த பெரும் தொண்டு, தேவாரத் திருப்பதிகங்களைத் தேடி, அவை சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலய அறை ஒன்றில் அடைந்து கிடந்து, கறையானுக்கு இரையாகி வரும் செய்தி அறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்தது.

 

புறப்பாட்டிற்கு தயாராகும் நாயன்மார்கள் 

இதற்காக ராஜராஜ சோழனிடம், ஆலய தீக்ஷிதர்கள், தேவாரத்தைப் பாடித் தந்த அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மூவரும் நேரில் வந்தால்தான் சுவடிகளைத் தருவோம் என்று வாதம் புரிந்தனர். தூய சிவபக்தன்  இராஜராஜன் மன்னனாக,  அவர்களைச் சிறையில் பூட்டி, பாடல்களைப் பறிமுதல் பண்ணலாம் என்று எண்ணாமல், தீக்ஷிதர்களிடம் எதிர் வாதம் செய்யாமல், மூவர் திருமேனியையும் சிலை வடிவில் கோயிலுக்கு எடுத்து வந்து நிறுத்தி, இதோ தேவாரம் பாடியோர் வந்துவிட்டார்கள். சுவடியைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றான். அதனால் நமக்குக் கிடைத்தது அமிழ்தினும் இனிய தேவாரம். சமய குரவர்கள் எனப்படும் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் சேர்ந்து 276 சிவாலயங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் எனப்படும். 

பன்னிரு திருமறைகள் 

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களி, சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களிலும், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.  

இன்று காலை திருவீதி புறப்பாட்டிற்கு தயாரான 'பன்னிரு திருமுறைகள்' மற்றும் இன்றைய 63 மூவர் விழாவிற்கு நாயன்மார்கள் பல்லக்கில் எழுந்து அருளி உள்ளனர்.   

அடியேன் திருவல்லிக்கேணி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
14.4.2022

2 comments: