Monday, January 24, 2022

இராப்பத்து சாற்றுமுறை - ஸ்வாமி நம்மாழ்வார் 'திருவடி தொழுதல்' 2022

இராப்பத்து சாற்றுமுறை  - ஸ்வாமி நம்மாழ்வார் 'திருவடி தொழுதல்'  2022

இன்று (22.1.2022)  ஓர் சீரிய நாள் -   ஸ்ரீவைஷ்ணவ உலகம் கொண்டாடும் ஓர் அற்புத நாள். பகல் பத்து பத்து நாள்கள் நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசி அன்று துவங்கி,  பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான்,  சடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம்  திருவாய்மொழியை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும் நிகழ்வில் காரிமாறனை திரும்ப அளித்து நமக்கு அருள் செய்வான்.  பத்து நாட்கள் பகல் பத்து உத்சவம் முடிந்து, பத்து நாட்கள் -  இராப்பத்து.  இன்று இராப்பத்து சாற்றுமுறை.  ஸ்வாமி  நம்மாழ்வார் திருநாட்டுக்கு சென்று அலங்கரித்து, மண்ணவர் விண்ணப்பிக்க நமக்கு திருப்பி தந்து அருளப்பட்ட அற்புத நாள்.


ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவாய்மொழியைகேட்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட உத்சவம் அத்யாயன உத்சவம்.  எம்பெருமானின் பரிபூர்ண அருளை பெற்ற நம்மாழ்வார்  'திருவடி தொழுதல்' என  திருநாட்டுக்கு சென்று அலங்கரித்துமண்ணவர் விண்ணப்பிக்க நமக்கு திருப்பி தந்து அருளப்பட்டவர்.  

ஸ்ரீவைகுந்தத்தின் எம்பெருமான் வீற்றிருக்கும் பரமபதத்தில் நிலவும்  இன்பம் எப்படி இருக்கும் ?   இவ்வையகமே  நிலையற்றது.  ஸ்ரீவைணவர்கள் விரும்புவது என்ன ~ 'வீடு பேறு' - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உறையும்  இடமான பரமபதம் சென்று, பரமபதநாதன் வீற்று இருக்குமிடத்திலே அத்தாணி சேவைகள் செய்வதே !.   பூலோகத்துக்கு அப்பாற்பட்ட பரமபதம் எனும் திருப்பதியிலே - எம்பெருமான் பரமபத நாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் , பெரிய பிராட்டியுடன்  அநந்தாங்க விமான நிழலில் சேவை சாதிப்பார்.  இந்த க்ஷேத்திரத்தின்  நதி, விரஜா நதி என்பர்.  அனந்தன், கருடன், விஷ்வக்சேனர், முதலான நித்ய சூரிகளும், முக்தர்களும் இங்கே கைங்கர்யங்கள் செய்வார்கள்.   எம்பெருமானுடைய ஐந்து நிலைகளில் - பர; வ்யூஹ; விபவ; அர்ச்சை ;  அந்தர்யாமி நிலைகளில் பரத்வம் நிறைந்து நிற்குமிடம் 'திருபரமபதம்".   

திருமங்கை ஆழ்வார் ஏற்படுத்திய இந்த அத்யயன  உத்சவத்தை, நாம் இன்று குறையில்லாமல் அனுபவிக்க முக்கியமான காரணம் நம் ஆசார்யர் ஸ்வாமி மணவாள மாமுனிகளே! .. அத்யயன உத்சவத்தின் சிறப்பு - எம்பெருமான் முன்பே அனைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்தருளப்பண்ணி அருளிச்செயல் சேவை சாதிப்பதே. 

கழிமின்  தொண்டீர்கள் கழித்துத்*  தொழுமின்   அவனைத் தொழுதால்

வழிநின்ற வல்வினை மாள்வித்து*  அழிவின்றி ஆக்கம் தருமே. 

தொண்டர்களே!  - ஒரு பயனும் இல்லாமல் கழிந்து செல்லும் பிரயோஜனமில்லாத  இதர   விஷயாந்தர பற்றை அகற்றி விடுங்கோள்; அவற்றை  கழித்துவிட்டு - அற்புத பூதனான ஸ்ரீமன் நாரணனை தொழுங்கள்;  அவ்வாறு அவனை  தொழுதமாத்திரத்தினால் , ஜன்ம பரம்பரையாய்த் தொடர்ந்து நின்ற வலிய பாவங்களை ஒழித்து  சாச்வதமான சிறந்த அற்புத செல்வத்தை தனது பக்தர்களுக்கு தந்தருள்வன் நம் எம்பெருமான் என்கிறார் சுவாமி நம்மாழ்வார்.

பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில், ஏனைய திவ்யதேசங்களிலும், பற்பல அபிமான ஸ்தலங்களிலும், இன்றளவும் பெரிய பெருமாளின் ஆக்யைப்படி… ஒவ்வொரு ஆண்டும் பெரிய திருநாளின் இராப்பத்து பத்தாம் நாள் உற்சவமாக நம்மாழ்வார் மோக்க்ஷம் சிறப்புற கொண்டாடப்படுகிறது.   திருவரங்கத்திலே  அரையர் ஸ்வாமி விண்ணப்பிக்க, மற்றைய திருத்தலங்களில் அத்யாபக ஸ்வாமி  எம்பெருமானிடத்திலே - மாறன் சடகோபனை இந்த பூவுலகத்திற்கே திரும்ப தந்தருள வேணுமென வேண்டி எம்பெருமானும் அவர்தம் அவாவை பூர்த்தி செய்து மகிழ்விப்பன். … 

இராப்பத்து  புறப்பாடு முடிந்து திருவாய்மொழி சேவிக்கப்பெறும்.  சாற்றுமுறையான இன்று (22.1.2022)  பத்தாம் பத்து பாசுரங்கள்.  முதலில் தாளடைந்தோர் தங்கட்கு தானே வழித்துணையாம் என நம் சுவாமி மணவாளமாமுனிகள் அனுசந்தித்த, 'தாள தாமரை தடமணி வயல்' எனும் திருவாய்மொழி.  ஒன்பதாம் திருவாய்மொழி - சூழ்விசும் பனி முகில்,  தூரியம்  முழங்கின - பரஜ்ஞானத்தை பெற்ற ஆழ்வார், எம்பெருமானால் அர்ச்சிராதிகதியை  காட்டப்பெற்று, திருநாட்டுக்கு சென்று, அங்குள்ள முக்தர்களோடு சேர்ந்தமையை, மயர்வற்ற மதிநலத்தால் கண்டு அருளிச்செய்தமை.  இந்த பத்து பாசுரங்கள் சேவிக்கும்  போது, அர்ச்சகர்கள் கைத்தலங்களில், நம்மாழ்வாரை ஏந்தி எம்பெருமானின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள்.  ஆழ்வாரும் திருத்துழாயில் முற்றிலும் மூழ்குவார்.  எம்பெருமான் திருவடியில்,  நம்மாழ்வாரை சூழ்ந்த அத் திருத்துழாய் பிரசாதமாக கிடைத்தல் பரம பாக்கியம். 

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்

வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று

வைகுந்த்தமரரும் முனிவரும் வியந்தனர்

வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

மன்னவர் விதி இந்த பூவுலகம் நீங்கி, எம்பெருமான் அருளுடன் அவனிடம் சேர்தலே !  அவ்வாறு வந்த நம்மாழ்வாரை - கின்னரர் கெருடர்கள் கீதங்கள் பாடியும்,அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழங்கவும், முனிவர்கள் இருமருங்கிலும், தோரணங்கள் நிறைத்து தொழ, திருமாமணி மண்டபத்து அடியரோடு சேர்ந்து அந்தமில் பேரின்பத்தை அடைந்த சடகோபனை - திரும்ப தந்தருள வேணும் என கண்ணீருடன் உலகத்தோர் வேண்டினர்.  

இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர எம்பெருமானிடத்திலே விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் விமர்சையாக நடைபெறுகின்றது. 

எம்பெருமானை அலங்கரித்த (திருவரங்கத்திலே நம்பெருமாளை தழுவிய) மலர் மாலை, களைந்து ஆழ்வாருக்கு சாற்றப்படுகிறது.   தன் பெருவீட்டுக்கு அற்புதமான அருளிச்செயல் அந்தாதி பாடிய ஆழ்வாரை நமக்கே திரும்ப கொடுத்து,  பரமபதத்துக்கு சென்ற முக்தனுக்கு பகவான் அருள்புரிவது காட்டப்படுகிறது.  

இதை நேரில் கண்டோர் அளவிலா ஆனந்தத்தில் கண்ணீர் மல்குவர்; நாத்தழுதெழ ஆழ்வார் தம் பெருமை மறுபடி மறுபடி நினைவுறுவர். 22.1.2022    அன்று திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் திருக்கோவிலில் சிறப்புற நடந்தேறிய 'நம்மாழ்வார் திருவடி தொழல்' வைபவத்தின் சில புகைப்படங்கள் இங்கே.  

இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் திருவடிகளே சரணம்.

திருக்குருகை மாறன் சடகோபன் திருவடிகளே சரணம் !!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
இராப்பத்து சாற்றுமுறை - 22.01.2022 
















3 comments:

  1. Excellent Writeup and pictures are amazing Swami.

    B Venkatakrishnan
    ThiruvallikkeNi

    ReplyDelete
  2. Kesava Madhava Govinda🙏 உன் கருணையே கருணை✌️🙏 ஜய ஸ்ரீ விகநஸ 🙏

    ReplyDelete