இன்றைய
காலகட்டத்தில் மக்கள் பலர் நிம்மதியற்று உள்ளனர்.
கொரோனா தீநுண்மி உலகோரை பயமுறுத்தி உள்ளது. இந்த கடின காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற
கேள்வி எழும் !!
ஆயிரம்
ஆண்டுகள் முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில்
வெகுவாக பொருந்தும். நிலை கேட்ட மாந்தர்களே
! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர்.
ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன்
திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.
இன்று ஆனித் திருமூலம் - ஸ்ரீ வைணவர்களுக்கு
ஒரு சீரிய நாள்.
திருவல்லிக்கேணி
உட்பட்ட பற்பல திவ்யதேசங்களில் பெருமாளை சேவித்து இருப்பீர். எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை தொழும் நமக்கு நலம்
தரும் சொல் 'ஓம் நமோ நாராயணா' என்ற திருமந்திரம். ஸ்ரீவைணவர்களில் சீர்மையே அருளிச்செயல் எனும் நாலாயிர
திவ்யப்ரபந்த பாசுரங்களினால் பெருமாளை துதிப்பதுவே !
ஆழ்வார்கள்
பாசுரங்களின் தொகுப்பே 'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தம்'. தேனினும் இனிய சுவைமிக்க திவ்ய பிரபந்த பாசுரங்களை
10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ நாதமுனிகள் தொகுத்து வழங்கினார். நாம் அனுதினமும் திருக்கோவில்களில், இல்லங்களிலும்
திவ்யப்ரபந்தத்தை இசைக்கிறோம். இது : முதலாயிரம்
(திருப்பல்லாண்டு; பெரியாழ்வார் திருமொழி; திருப்பாவை; நாச்சியார் திருமொழி; பெருமாள்
திருமொழி; திருச்சந்த விருத்தம்; திருமாலை; திருப்பள்ளியெழுச்சி; அமலனாதிபிரான்; கண்ணிநுண்சிறுத்தாம்பு
உள்ளடக்கியது): இரண்டாமாயிரம் (கலியனின் பெரிய
திருமொழி, திருக்குறுந்தாண்டகம்; திருநெடுந்தாண்டகம்); மூன்றாமாயிரம் (இயற்பா) [முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி; மூன்றாம் திருவந்தாதி; நான்முகன்
திருவந்தாதி; திருவிருத்தம்; திருவாசிரியம்; பெரிய திருவந்தாதி; திருவெழுக்கூற்றிருக்கை;
சிறிய திருமடல்; பெரிய திருமடல்); நான்காமாயிரம்
(சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி) ஆகியவையின்
தொகுப்பு. ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என மேலாக வழங்கப்படுகிறது. திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம்
எனும் சொல் பலவகைபாடல் தொகுப்பினையும் குறிக்கும்.
திருக்கோவில்களில் கவனித்து இருப்பீர். திவ்யப்ரபந்தம் அநுஸந்திக்கும் முன் தனியனை பாடி
துவங்குவர். புறப்பாடு வேளைகளில் கவனித்து
இருக்கலாம். பெருமாளின் ஸ்ரீசடகோபம் மரியாதையை பெற்றுக்கொண்டவுடன் முதல் தீர்த்தக்கார் - தனியனை ஆரம்பிக்க, அவருடன் மொத கோஷ்டியாரும் சேர்ந்து பிரபந்தம்
இசைப்பர். தனியன் என்பது பொதுவாக ஆசார்யரைப்
பற்றிய புகழ் பாடும் துதி, அவரது சிஷ்யரால்
இயற்றப்படுவது.
இன்று ஆனித் திருமூலம் - "ஸ்ரீசைலேச தயா பாத்ரம் " தனியன் அவதரித்த
நன்னாள். இந்த நன்னாளிலே பெருமை வாய்ந்த திருவரங்கம்
திருக்கோவிலிலே பெரிய பெருமாள் திருமுன்பே
ஆசார்ய சார்வபௌமரான அழகிய மணவாள மாமுனிகள் ஓராண்டு திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம்
சாதித்து பூர்த்தி செய்த நன்னாள். அந்த வைபவத்தில்
- 'ஆனி மாதம், மூலம் நட்சத்திரம்' அன்று நம்பெருமாள்
சிறுவனாக வந்து, மாமுனிகள் முன்பு 'ஸ்ரீ சைலேச
தனியன்' திருவாய் மலர்ந்தருளி - நமக்கு இந்த
அற்புத தனியன் உதித்தது. எனவே இன்று ஸ்ரீசைலேச திருவவதார வைபவம்' அதாவது, ஸ்ரீசைலேச
மந்த்ரம் பிறந்த நாள்
நம்
பூர்வாசார்யர்கள் வாக்கின் படி ஸ்ரீரங்கநாயகரான
பெரிய பெருமாள் மணவாள மாமுனிகளை ஆச்சாரியனாக பெறதிருவுள்ளம் விரும்பி, அர்ச்சகரிடத்தில்
'நமக்கு மணவாள மாமுனியினிடத்திலே திராவிட வேதமான திவ்யபிரபந்த வ்யாக்யானங்கள் (விளக்க
உரை) கேட்க வேணும். ஆகையாலே மாமுனியை கருடமண்டபத்திற்கு அழைத்து வரச் செய்வீர் ' என்று
ஆணை பிறப்பித்தார். நம்பெருமாளின் ஆணைப்படி கருட மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மாமுனிகளும் ஸ்ரீவைஷ்ணவ
கோஷ்டியினருக்கு பெரியவண்குருகூர் நம்பியான
நம்மாழ்வாருடைய திருவாய்மொழி பாசுரங்களின் விளக்க உரையை ஈடு முப்பத்தாறாயிரத்தின் அடிப்படையில்அருளினார். கலியுகம் 4534 ம் ஆண்டு பிரமாதீச வருடம் ஆனி மாதம், பெளர்ணமி திதி, மூல நட்சத்திரம் நாள் வரை தொடர்ந்து பத்து மாதங்கள் மாமுனிகள் வ்யாக்யானம்
செய்ய மிகவும் உகந்து கேட்டு மகிழ்ந்தார் நம்பெருமாள்.
நாம்
உகக்கும் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதனாலேயே அருளைப்பெற தனியன் :
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை
கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள
மாமுனியை வணங்குகிறேன்.)
ஸ்ரீரங்கநாதன் ஏன் மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் சாதிக்கும் படி நியமித்தான்?
ஆளவந்தாரையோ உடயவரையோ ஈட்டின் ஆசிரியரான நம்பிள்ளயையோ சாதிக்கும் படி ஏன் நியமிக்கவில்லை?
இதற்கு முக்யமான காரணம் எந்த ஆசார்யரை சாதிக்கச் சொன்னாலும் அவர்களுக்கு
முன்பிருந்த ஆசார்யர்கள் ஸ்ரீசூக்திகளை கொண்டு மட்டும் தான் அனுபவிக்க முடியும். ஆனால்
மாமுனிகள் சாதித்தால் தான் குருபரம்பரையில் உள்ள அனைத்து ஆசார்யர்களின் சூக்திகளையும்
ஒன்று சேர அனுபவிக்க முடியம் என்பதனால் தான் இந்த மஹாகார்யத்தை மாமுனிகளைக் கொண்டு
பூர்த்தி செய்து கொண்டான் அழகிய மணவாளன். இது வெறும் பெருமைக்காக சொல்லும் வார்த்தையோ
அல்லது உபசார வார்த்தையோ இல்லை என்பது மாமுனிகளின் வ்யாக்யான ஸ்ரீசூக்திகளை சேவித்தால்
நன்கு விளங்கும். ஒரு இடத்தை விவரிக்கும் போது அதன் தொடர்பாக உள்ள அத்தனை ஆசார்யர்களின்
ப்ரமாணகளையும் திரட்டி விளக்குவார் மாமுனிகள்.
மிகுந்த புத்தகம் மற்றும் அச்சு சௌகரியங்கள் நிறைந்த இக்காலத்தில் வாழும்
நமக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் மாமுனிகள் காலம் ஸ்ரீரங்கத்தில்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அடியோடு அழிந்திருந்த காலம். எந்த எந்த க்ரந்தத்திற்கு எந்த எந்த ஆசார்யர்கள்
உறையிட்டு உள்ளனர் என்றே தெரியாத காலம் அது. மாமுனிகள் தான் கஷ்டப்பட்டு அனைத்து பூர்வாசார்ய
வ்யாக்யானங்களையும் கண்டு பிடித்து ஒன்று திரட்டினார். இதை தாமே ஆர்த்திப் ப்ரபந்தத்தில்
அருளிச்செய்கிறார் - "பண்டு பல ஆரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்து அருளும்
பல்கலைகள் தம்மைக் கண்டு அதெல்லாம் எழுதி அவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன்
கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்" என்று. அந்த வ்யாக்யானங்களை கண்டு பிடித்து
சேகரித்ததொடு அல்லாமல் அத்தனை விஷயங்களையும் தம் நெஞ்சிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருந்து
அதை அனுபவிப்பதையே போது போக்காகக் கொண்டார். அதையும் ஆர்த்திப் ப்ரபந்தத்தில் தெரிவிக்கிறார்
"முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப்பெற்றோம் - முழுதம் நமக்கு அவை பொழுதுபோக்காகப்
பெற்றோம் - பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேறாமல் பெற்றோம் " என்று. அதனால் தான்
"ஈட்டுப் பெருக்கர்" என்கிற அசாதாரணமான திருநாமம் மாமுனிகளுக்கு ஏற்ப்பட்டது.
ஸ்ரீ ரங்கநாதன் இயற்றிய "ஸ்ரீ சைலேச தயா பாத்ர" தனியன் அவதரித்த இந்நன்னாளில்
மாமுனிகளின் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை வணங்கி நிற்போம்.
(இந்த பகுதி முழுவதும் நமது வைணவ உலகுக்கு அரிய தொண்டாற்றிவரும்
முனைவர் மண்டயம் அனந்தான்பிள்ளை வேங்கடகிருஷ்ணன் சுவாமி உரை - கீதாச்சார்யன் இதழில்
இருந்து மறுபடி பதிவிடப்பட்டுள்ளது)
ஸ்ரீவைஷ்ணவ
திருக்கோவிலிற்கு சென்றால் திருத்துழாய், தீர்த்தம் ப்ரசாதங்களுடன், ஸ்ரீசடகோபமும்
கிடைத்தல் மிக சிறப்பானது. சுவாமி மணவாள மாமுனிகளின்"திருவடிநிலைகள்"
(திருப்பாதுகைகள்) இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்குஉத்திரவீதியில் உள்ள,மணவாள மாமுனிகளின்
மடத்தில் இன்றுவரை உள்ளது. மாமுனிகள் திருவடிகளின்
பெயர் - “பொன்னடியாம் செங்கமலம்” அவரது பொன்னடி
சார்த்திக்கொள்ளுதல் நமக்கு சிறப்பு.
இன்றளவும்
அனைத்து தென்னாசார்ய திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களில், மடங்களிலும், இல்லங்களிலும்
திவ்யப்ரபந்தம் - ஸ்ரீ சைலேச தயா பாத்திரம் தனியன் சொல்லியே சேவிக்கப்பெறுகின்றது.
நமக்கு 'ஸ்ரீசைலேச' தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும்
கொண்டாடி மகிழ்வோம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
'ஆச்சாரியன் திருவடிகளே சரணம்'
'மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் '.
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன்
திருவல்லிக்கேணி
ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
4.7.2020
PS : this is adiyen attempt to compile some information on Sri
Nalayira divyaprabandham, thaniyan, our Acharya Swami Manavala mamunigal and
the glorious thaniyan gotten from Periya Perumal.
Due to my ignorance there could be some errors or the presentation
could have been better. If any such
mistakes are brought to my notice, I for sure would have them corrected.
Falling at the feet of our glorious Acaryas, all Srivaishnavas, kainkaryabarargal and all
bagavathas engaged in kainkaryam to our Emperuman.
Place my regards and reverence to Dr MA Venkatakrishnan swami
who taught divyaprabantham in ‘santhai murai’ to hundreds of students like us
and is now conducting discourses.
Thanks are due to Sri Kanakaraj kumar (Sri Krishnavaibhavam) for
the video so wonderfully made and sent within 15 mins of my asking him.
No comments:
Post a Comment