Monday, November 1, 2010

Sree Sarada Sevashram at Mannivakkam (near Vandalur off Chennai)


அன்பு நண்பர்களே 

இன்று காலை ஒரு செய்தி படித்தேன்.  பிரபல வோல்க்ஸ்வகோன்  நிறுவனம்” ‘ புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் ‘ தங்களது சிறப்பு விளையாட்டு வடிவ கார்  "புகாட்டி  வெயரோன்  16.4  கிரந்த் ஸ்போர்ட்"  மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.  இன்றைய இளைநர்களுக்கு எல்லாவற்றிலுமே சிறந்ததுதான் தேவை. இந்த நவீன சிறப்பு கார் உலகத்தில் எல்லா பணக்கார நாடுகளிலும் ஓடுகிறது.  இந்தியர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது ஞாயமல்ல !!

இந்த காரின் விலை பதினாறு கோடிக்கு மேல்.  இதற்கு முன் மிக விலை உயர்ந்த கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் பான்தோம் மற்றும் மேபாச் - இவற்றின் விலை ஐந்து கோடி தான்.  இந்த புகாட்டி  வெயரோன்   மணிக்கு 407 கிமீ செல்ல வல்லது. 2.7 நொடியில்  ஜீரோவிலிருந்து 100 கி மீ வேகம் எடுக்கும். ! பிரமிப்பாக உள்ளதா ??   உலகெங்கும் வருடத்துக்கு இது போன்ற கார்கள் எண்பது மட்டுமே விற்கப்படுகின்றன.  விரைவில் நமது சாதாரண குடிமகனுக்கும் இது போன்ற ஒரு காரை பார்த்து மூக்கில் விரல் வைக்க வாய்ப்பு கிடைக்கும்.,  வசதி படைத்தவர்கள் கார் வாங்கலாமா என்பதோ அவர்கள் தங்கள் சொந்த பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதோ இந்த இடுகையின் நோக்கம் அல்ல.

இன்றைய சமுதாயம் மிக வேகமானது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக்  கூட தங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரிந்துள்ளது.  கூட இருப்பவர்களுடன் தன்னை சீர் தூக்கி தனக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.  அவர்கள் தங்கள் ஆசையை விட சற்று குறைந்ததுக்கும் ஒப்ப மாட்டார்கள்.  அவர்களிடம் தெளிவான சிந்தனை, சொல்திறன், ஆங்காரம், அடங்கா மனது எல்லாமும் உள்ளது.  சமுதாய மாறுதல்.  புலம்பி பிரயோஜனமில்லை.

இந்திய தேசம் இன்னமும் கிராமங்களில் வசிக்கிறது. அவர்களை காண நகரத்தில் இருந்து தொலை தூரம் செல்ல அவசியமில்லை. பெருநகரங்களிலும் மிக நிறைய ஏழைகள் உள்ளனர்.  இங்குள்ள குழந்தைகள் ஒரு வேளை நல்ல உணவுக்கும், சற்று ஒதுங்க இருப்பிடத்துக்கும் பரிதவிக்கின்றன. பலருக்கு வாழ்க்கையே போராட்டம் - சாதாரண தேவைகள் கூட ஆடம்பரம்.  நடுத்தர வர்க்கம் என்பதுவும் வழக்கு ஒழிந்து வருகிறது.  நடுத்தர வர்க்க மனிதன் தனது கனவுகளை துரத்துகிறான்.  எப்படியாவது பணக்காரன் ஆக பெரு  முயற்சி செய்கிறான். ஒரு காலத்தில் சேமிப்புக்கு முக்கியம் தந்த சமுதாயம் இப்போது எல்லாவற்றையும் வாங்க முயற்சி செய்கிறது.  பணம் இல்லை எனில் பிளாஸ்டிக் கார்ட் உள்ளது. கடன் தர வங்கிகள் உள்ளன.

வாழ்க்கையை பகுதி பிரித்தால், இளமை முடிந்தவுடன் மனிதன் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பருவம். தற்போதைய சமுதாயத்தினர் பேராசையுடன் ஓடிக்கொண்டே  உள்ளனர்.  நாற்பது வயது என்பது பணம் சம்பாதிக்கும் வயது. எதிர்கால தேவைக்கு எல்லாம் சேர்த்து சம்பாதிக்க வேண்டும்.  இதுதான் குறிக்கோள்.

தவிர திரும்பும் இடம் எல்லாம் சாதனை புரிந்த நடிகர்கள், ஆட்சியாளர்கள், என சாதித்தவர்கள் ப்ளெக்ஸ் போர்டுகளில் மின்னுகின்றனர். இப்படிப்பட்ட சமுதாயத்தில், இன்னமும் சிலர் சுய சிந்தை இல்லாமல் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியுடன் செயல் படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு மாணிக்கத்தை 31/10/2010 அன்று மண்ணிவாக்கத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சாது யோகி குமார் என்ற இவர் நாற்பது வயது இளைஞர். தனது இளம் வயதில் ராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்து, இமயமலைக்கு சென்று சன்யாசம் பெற்று, யோகா கலை கற்று  தனது தணியாத தாகத்தை தணித்துகொள்ள சென்னை திரும்பி ஒரு ஆஷரமத்தை நடத்தி வருகிறார்.  இவரது மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து நடத்தி வருவதுதான் "ஸ்ரீ சாரதா சேவாஷ்ரம்". இந்த  ஆஷ்ரம் சாது  யோகா குமாரால் துவங்கப்பட்டு, திருவாளர்கள் ரகுராமன், சந்திர சேகரன், விஜய செல்வராஜ், குமர குருபரன்,  பாலசுப்ரமணியம் போன்றோரின்  சீரிய உதவிகளுடன் ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னையின் வாகன மற்றும் மக்கள் கும்பலை தாண்டி வண்டலூர்  அருகே  மண்ணிவாக்கம் என்ற  பகுதியில் மிக தூய்மையாக இந்த ஆஷ்ரமம் அமைந்து உள்ளது. இங்கு  26  சிறார்கள் (மாணவ, மாணவியர்) அன்புடன் தங்க வைக்கப்பட்டு,  உணவு, உடை,  இருப்பிடம், படிப்பு, பாசம் அனைத்தும் சூழ நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.   ஆஷ்ரமம் பாரத தாய் திருநாட்டில் வாழ்ந்த ரிஷிகள் ஞானியர் முனிவர்கள் மற்றும் தேச பெரியவர்கள் கட்டி தந்த வழிமுறையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அவர்களது நெறிமுறைகளை பின்பற்றி நடத்த பெறுகிறது. திரு சாது குமாரின் குறிக்கோள், இது போன்ற சிறுவர்களை நெறி படுத்தி வாழ்வில் வெற்றி பெற செய்வதே.  இங்கு அவர்களுக்கு நல் ஒழுக்கம், நேர்மையான வாழ்க்கை குறிக்கோள்கள் கற்று தரபடுகின்றன.   அவர்கள் தினமும் அதிகாலை இறை வணக்கத்துடன் நாளை தொடங்கி, யோகா, உடற் பயிற்சி போன்றவற்றுடன் பள்ளி படிப்பு படித்து, ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.

இங்கே காற்றில் இருந்து எல்லாமே சுத்தமாக உள்ளது.  சுவாமி இங்கு தேவைக்கு அதிகமாக எதுவும் அவசியம் இல்லை என்று திண்ணமாக சொல்கிறார்.  ஆஸ்ரமத்தின் தேவைகள் சீரிய முறையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.  வாரத்தின் வெவ்வேறு   நாட்களில் என்னென்ன உணவு என்பதும் பட்டியலில் உள்ளது. 

சைமாவில் இருந்து ஒரு குழுவாக நாங்கள் நேற்று (31/10/2010) இங்கு சென்றோம்.   சுவாமியும் மற்ற நிர்வாகிகளும் எங்களை அன்புடன் வரவேற்றனர். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடி அவர்களுடன் கலந்து உரையாடி, நாங்கள் களித்தோம். ஆஸ்ரமத்துக்கு எங்காளால் இயன்ற சிறு பொருள் உதவி அளித்து மகிழ்ந்தோம்.  கொஞ்சம் தலை அணைகள், பாய்கள், போர்வைகள், நோட்டு புத்தங்கள், மளிகை பொருள்கள், வாளிகள் போன்றன அளித்தோம். இந்த ஆஸ்ரமத்தின் முகவரி தகவல் தொடர்புக்கு : 
ஸ்ரீ சாரதா சேவாஷ்ரம், பதிவு எண்:  751/IV-2006,
No. 1/3 வடக்கு மாட வீதி,
மண்ணிவாக்கம் (சிவன் கோயில் அருகில்)
சென்னை 600048 P: 044 2275 0012; M 99402 08225.

எங்களது வாழ்வில் இந்த நாள் ஒரு இனிய நாளாக இருந்தது. நீங்களும் உங்களுக்கு எளிதான சமயம், இந்த ஆஸ்ரமத்துக்கு சென்று இல்ல குழந்தைகளோடு சேர்ந்து இருந்து மகிழ்வீர்.

இந்த ஆஸ்ரம் பற்றிய மேலும் விவரங்கள் அறிய, தயைகூர்ந்து இந்த வலை மனைக்கு செல்லவும்.  :  http://sreesaradasevashram.blogspot.com/


அன்புடன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.



No comments:

Post a Comment